search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் தட்டுப்பாடு"

    • விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
    • கோத்தகிரியில் உள்ள ஒரு சில பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு அருகே உள்ள ஈளாடா கிராமத்தில் 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், 9 முதல் 12 அடி ஆழமும் கொண்ட ஈளாடா தடுப்பணை உள்ளது.

    மலைப்பகுதியில் உள்ள இயற்கை ஊற்றுக்களில் வரும் தண்ணீர் இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் கோத்தகிரி நேரு பூங்கா அருகில் உள்ள நீர் உந்து நிலையத்திலுள்ள தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டு, நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தடுப்பணையை நம்பி, அதன் அருகே உள்ள விவசாய நிலங்களும் பயன்பெற்று வருகின்றனர். விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களாக கொடநாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இயற்கை ஊற்றுகள் காய்ந்து வறண்டு காணப்படுகிறது.

    இதனால் ஈளாடா அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணையில் தண்ணீர் குறைந்துள்ளது. தொடர்ந்து வெயில் அடித்து வருவதாலும், அணையில் தண்ணீர் குறைவதாலும் ஈளாடா, கோத்தகிரி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    இப்போதே கோத்தகிரியில் உள்ள ஒரு சில பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    கோத்தகிரி மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மாற்று திட்டமாகக் கொண்டு வரப்பட்ட அளக்கரை குடிநீர் திட்டத்தில் நீர் உந்து அறைகளில் ஏற்பட்டு வரும் மின் அழுத்தக் குறைபாடு காரணமாக மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாவதாலும், நீர் உந்து நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்களுக்கான மின்கட்டணம் மிக அதிகமாக இருப்பதாலும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அளக்கரை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எந்திரத்தில் இருந்து தண்ணீர் குடிப்பதற்காக குரங்கு முயற்சி செய்யும் காட்சிகளும், மற்றொரு குரங்கு சமையல் அறையின் ஜன்னலில் அமர்ந்திருக்கும் காட்சிகளும் உள்ளன.
    • பெங்களூரு நகரில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி இருந்த நிலையில் தற்போது பரவி வரும் இந்த வீடியோ பேசுபொருளாகி உள்ளது.

    கொளுத்தும் கோடை வெயிலில் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் தாகத்தால் மிகவும் தவிக்கின்றனர். இந்நிலையில் தாகத்தில் இருந்து நிவாரணம் தேடி ஒரு வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்த குரங்கு அங்கிருந்த சுத்திகரிப்பு எந்திரத்தில் இருந்து தண்ணீர் குடிக்க முயற்சிக்கும் வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.

    பெங்களூரை சேர்ந்த அக்ஷத் என்ற பயனரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு வீட்டின் ஜன்னல் திறந்து கிடக்கும் நிலையில், அதன் வழியாக குரங்குகள் வீட்டின் சமையல் அறைக்குள் செல்கின்றன. அதில் ஒரு குரங்கு சமையல் அறையில் உள்ள சுத்திகரிப்பு எந்திரத்தை நோக்கி செல்கிறது. பின்னர் எந்திரத்தில் இருந்து தண்ணீர் குடிப்பதற்காக குரங்கு முயற்சி செய்யும் காட்சிகளும், மற்றொரு குரங்கு சமையல் அறையின் ஜன்னலில் அமர்ந்திருக்கும் காட்சிகளும் உள்ளன.

    பெங்களூரு நகரில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி இருந்த நிலையில் தற்போது பரவி வரும் இந்த வீடியோ பேசுபொருளாகி உள்ளது.


    • சில இடங்களில் மக்கள் குடிநீருக்காக தொலைதூரத்திற்கு சென்று வரக்கூடிய நிலை உள்ளது.
    • மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்க முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை முன்னேற்பாடாக மேற்கொள்ள முன்வர வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, தற்போதைய கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டை விட இப்போதைய கோடைக்காலத்தில் அதிக வெப்ப அலை வீசும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு என செய்திகள் தெரிவிக்கின்றன. இப்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள நீரின் அளவு குறைந்து வருகிறது. பல இடங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் வறண்டு காணப்படுகின்றன. சில இடங்களில் மக்கள் குடிநீருக்காக தொலைதூரத்திற்கு சென்று வரக்கூடிய நிலை உள்ளது.

    கோடைக்காலத்தில் மழை பெய்தால் ஓரளவுக்கு மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி ஆகும். மழை பெய்யவில்லை என்றால் தண்ணீருக்கு மக்கள் சிரமப்படக்கூடிய நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு, மாநிலத்தில் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும், பொது மக்களின் குடிநீருக்கும் தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது ஆங்காங்கே உள்ள கிணறுகளை தூர்வாரலாம், கைப்பம்புகளை அமைக்கலாம், ஏற்கனவே தண்ணீர் வராத கைப்பம்புகளை சரிசெய்யலாம், நீர்த்தொட்டிகளை அமைக்கலாம், குடிநீர் குழாய்களைப் பராமரிக்கலாம் இப்படி தண்ணீர் கிடைப்பதற்கு உரிய பணிகளை உடனடியாக மேற்கொண்டால் வரும் நாட்களில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க உதவியாக இருக்கும்.

    தண்ணீரை சிக்கனமாக தேவைக்கு ஏற்ப பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்கு விவசாயிகளின் ஆலோசனையை, கோரிக்கையை கேட்கலாம். எனவே தமிழக அரசு, இந்த கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்க முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை முன்னேற்பாடாக மேற்கொள்ள முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆத்திரமடைந்த கிராம மக்கள், உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    • 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாகவும், ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் போலீசார் உறுதி கூறினர்.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அருகே கூ.கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அருகேயுள்ள பகுதிகளுக்கு சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கிராம பஞ்சாயத்து தலைவர் கொளஞ்சியிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். தேர்தல் முடிந்தவுடன் சரி செய்வதாக பொதுமக்களிடம் அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிந்து 2 நாட்கள் ஆகியும், குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கையை ஊராட்சி தலைவர் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் இன்று காலை 7 மணிக்கு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    இத்தகவல் அறிந்து ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவர் கொளஞ்சி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு, ஆபாசமாக திட்டியதாகவும், சாலையில் இருந்த காலிக்குடங்களை எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இருந்த போதும் பொதுமக்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து விரைந்து சென்ற திருநாவலூர் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், பிரபு மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஊராட்சி செயலாளரையும் அங்கு வரவழைத்தனர். 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாகவும், ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் போலீசார் உறுதி கூறினர். இதனையேற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊராட்சி தலைவர் தகராறில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஏரிகளில் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது.
    • குடிநீர் பிரச்னையை பிஆர்எஸ் கட்சி பெரிதாக பேசுகிறது.


    தெலுங்கானாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதல்வரானார். லோக்சபா தேர்தலிலும் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இருக்கிறது.

    தெலுங்கானாவில் மொத்தமுள்ள 17 லோக்சபா தொகுதிகளில் 14ல் வெற்றிபெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து வேலை செய்து வருகிறது.

    இந்நிலையில், குடிநீர் பற்றாக்குறை தெலுங்கானாவில் காங்கிரசுக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் வேகமாக வற்றி வருவது காங்கிரஸ் ஆட்சிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    தலைநகர் ஐதராபாத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் உஸ்மான் சாகர், ஹிமாயத் சாகர் ஆகிய இரண்டு ஏரிகளிலும் அதன் கொள்ளளவில் 60 சதவீதம் தண்ணீரே உள்ளது.

    அதேபோல், மாநிலத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நாகார் ஷூன சாகர், ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம் ஆகியவற்றிலும் அதன் கொள்ளளவில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே நீர் இருப்பு உள்ளது.

    தெலுங்கானாவில் இப்போதே ஆங்காங்கே தலைகாட்டத் தொடங்கியுள்ள குடிநீர் பிரச்னையை பிஆர்எஸ் கட்சி பெரிதாக பேசுகிறது.

    இந்த ஆண்டு தெலுங்கானாவில் மழைப்பொழிவு குறையவில்லை. ஆனாலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது என்றால் அது மாநில அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என்ற பிஆர்எஸ் கட்சியின் குற்றச்சாட்டி வருகிறது.

    இது மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    • அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகளில் உள்ளவர்கள் தொட்டியில் குடிநீரை சேமித்து வைத்து கொள்கின்றனர்.
    • குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 20 லாரிகள் கூடுதலாக வாடகைக்கு அமைத்துள்ளது.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவகிறது. சென்னையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் குறைந்து கொண்டே வந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருவதால் குடிநீர் பயன்பாடு அதிகரித்து உள்ளது. வீடுகளுக்கு குழாய் மூலமும் லாரிகள் வழியாகவும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. குழாய் மூலம் தண்ணீர் கொடுக்க முடியாத பகுதிகளில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் லாரிகள் மூலம் கொண்டு சென்று நிரப்பி வருகிறது.

    சென்னையில் தினமும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 700 நடைகள் (டிரிப்) குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது அது ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 800 நடைகளாக உயர்ந்து உள்ளது. அதிகரித்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 20 லாரிகள் கூடுதலாக வாடகைக்கு அமைத்துள்ளது.

    இது குறித்து சென்னை குடிநீர் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான தேவை அதிகரித்து வருகிறது. குழாய் மூலம் குடிநீர் வழங்க முடியாத பகுதிகளில் டயல் செய்து ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதி இருப்பதால் ஏராளமானவர்கள் இதன் வழியாக குடிநீருக்கு பதிவு செய்கின்றனர். பணம் செலுத்தி குடிநீர் பெறுவோர் பயன்பாடு கூடியுள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகளில் உள்ளவர்கள் தொட்டியில் குடிநீரை சேமித்து வைத்து கொள்கின்றனர்.

    மேலும், மார்ச் மாதத்தில் தெருக்களில் உள்ள தொட்டிகளை நிரப்ப 61 ஆயிரம் நடைகள் பயன்படுத்தப்பட்டன. அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த லாரி டிரிப்புகள் 24,800 ஆக அதிகரித்துள்ளது.

    இதே போல டயல் குடிநீர் தேவை 30 ஆயிரம் நடைகளை உயர்ந்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு லாரிகளின் டிரிப்புகளை அதிகரித்துள்ளது. தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் இலவசமாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    டேங்கர் லாரிகளின் பயணங்களை அதிகரிப்ப தன் மூலம் தனியார் தண்ணீர் டேங்கர் சப்ளையர்களின் ஆதிக்கத்தை மறைமுகமாக குறைத்து வருகிறோம்.

    புதிதாக சேர்க்கப்பட்ட பகுதி மக்கள் தனியார் குடிநீர் லாரிகளை நம்பி உள்ளனர். அவர்களுக்கும் 'டயல்' குடிநீர் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருடம் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விவசாய பணி பாதிக்கப்பட்டுள்ளது.
    • கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரத்தில் உள்ளது.

    தாளவாடி சுற்று வட்டார கிராமம் திகனாரை, கெட்டவாடி, அருள்வாடி, தெட்டகாஜனூர், தலமலை, காளிதிம்பம், ஆசனூர், மாவள்ளம் குளியாட, கேர்மாளம் என 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    இப்பகுதியில் வசிக்கும் மக்களின் முக்கிய தொழில் விவசாயம். தாளவாடி பகுதி முழுவதும் ஆழ்குழாய் கிணறு மூலம் தான் விவசாயம் செய்து வருகின்றனர். ஆற்று நீர் பாசனம் எதுவும் கிடையாது.

    இந்த வருடம் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விவசாய பணி பாதிக்கப்பட்டுள்ளது. குளம், குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் அனைத்தும் காய்ந்து கிடைக்கிறது. வாழை, கரும்பு, தக்காளி மற்றும் முட்டைகோஷ் பயிர் செய்த விவசாயிகள் நிலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் காய்ந்து வருகிறது. கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

    ஊராட்சிக்கு உட்பட்ட ஆழ்குழாய் கிணறு கை விட்டதால் குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 20 குடம் வரை தண்ணீர் வந்த நிலையில் தற்போது ஒரு வீட்டிற்கு 2 முதல் 3 குடம் மட்டுமே தண்ணீர் கிடைப்பதாகவும், ஒரு சில இடங்களில் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

    இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு மாதத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டும் நிலை உள்ளது. மழை காலங்களில் ஓடைகளில் செல்லும் தண்ணீரை தடுத்து தடுப்பணைகள் கட்டி தேக்கி வைத்தால் மட்டுமே நிலத்தடிநீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • கவுஸ்பீக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் ராஜாவை திட்டினார்.
    • விக்னேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குண்டுப்பட்டி கிராமத்தில் 17 குடியிருப்பு வீடுகள் உள்ளன.

    இக்கிராமத்தின் குடிநீர் தேவைக்காக கிராமத்தின் மையப்பகுதியில் புளியம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 26-ந் தேதி அன்று ராஜா (வயது55) என்பவர் அதே பகுதியில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் அருகே கட்டி வரும் புதிய குடியிருப்பு வீட்டிற்கு பைப் மூலம் தண்ணீர் எடுத்துள்ளார். இதனை அருகே குடியிருக்கும் கவுஸ்பீ என்பவர், தட்டி கேட்டார்.

    இதைத்தொடர்ந்து ராஜா கட்டிடத்திற்கு எடுத்து சென்ற குடிநீர் பைப் லைனை அகற்றியுள்ளார். இதனால் ராஜாவுக்கும், கவுஸ்பீக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் பேச்சுவார்த்தை முற்றிவிட, கவுஸ்பீயின் மருமகள் பாத்திமா (30) வீட்டிலிருந்து வெளியே வந்து ராஜாவை திட்டியுள்ளார். அப்போது கவுஸ்பீக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் ராஜாவை திட்டினார்.

    அப்போது அவர் ராஜவையும் அவரது மகன்கள் மணி (25), பிரபு (23) ஆகியோரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராஜாவின் மகன் மணி வீட்டிலிருந்த கட்டையை எடுத்து வந்து விக்னேஷை தாக்க முயன்றார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இதனை விக்னேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதனால், குடிநீர் பிடிப்பதில் தகராறு பிரச்சனை, மத பிரச்சனையாக மாறியதாக புரளி கிளம்பியது. மேலும், இந்த வீடியோ மாவட்டம் முழுவதும் பரவியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விக்னேஷ், மணி, பிரபு ஆகிய 3 பேரை கைது செய்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள பழனிசாமி மற்றும் வெண்ணிலா ஆகியோரை தேடி வருகின்றனர். இதுகுறித்து கைதான கவுஸ்பீ கூறியதாவது:- எங்களுக்குள் குடிநீர் பிடிப்பதில் தான் தகராறு ஏற்பட்டது. மற்றபடி சமூக வலைதளங்களில் வெளியானது அனைத்தும் புரளி என்று தெரிவித்தார்.

    • குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக கவுநீர் கலந்து வருவதாக தெரிகிறது.
    • குழாய் மூலம் வரும் தண்ணீர் தொடர்ந்து கருப்பாகவும், துர்நாற்றமாகவும் வருகிறது.

    அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 6-வது மெயின்ரோடு பகுதியில் உள்ள வீடுகளுக்கு கடந்த சில நாடகளாக கருப்பு நிறத்துடனும், துர்நாற்றத்துடனும் குடிநீர் வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது.

    இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் கழிவு நீர் அடைப்பை சரிசெய்தனர். பின்னர் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து மெட்ரோ வாட்டர் தண்ணீரை பயன்படுத்தும் படி அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து அப்பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக கவுநீர் கலந்து வருவதாக தெரிகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, கழிவுநீர் அடைப்பை சரிபார்த்த பிறகு குழாய்களில் வரும் தண்ணீரை சேமித்து வைக்கும் தொட்டியை சுத்தம் செய்யச் சொன்னார்கள். நாங்கள் அதை சுத்தம் செய்து எங்கள் தொட்டியின் வால்வை மூடிவிட்டோம். ஆனால் குழாய் மூலம் வரும் தண்ணீர் தொடர்ந்து கருப்பாகவும், துர்நாற்றமாகவும் வருகிறது. இதனால் சிலர் லாரிகளில் முன்பதிவு செய்து தண்ணீர் வாங்கி வருகின்றனர். தண்ணீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் போது பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து தினமும் லாரி தண்ணீரை முன்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். இதனால் தனியார் தண்ணீர் லாரிகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தண்ணீரில் கழிவு நீர் கலந்து வருவது முதல் முறையல்ல. இதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்டு, நவம்பர் மாதங்களிலும் தண்ணீர் மிகவும் மோசமாக வந்தது என்றார்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, அந்த பகுதியில் இருந்த கழிவுநீர் அடைப்பு சரிசெய்யப்பட்டது. தண்ணீர் மாசு குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.

    தண்ணீர் மாசு காரணமாக அப்பகுதியில் சிலருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கழிவுநீர் கலந்து வரும் தண்ணீரை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
    • குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைத்து காடையாம்பட்டி பகுதிக்கு நாள் ஒன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    இதன் மூலம் ஓமலூர், காடையாம்பட்டி, தொப்பூர், தாரமங்கலம், மேச்சேரி பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அனல்மின் நிலையம் செல்லும் சாலையில் காடையாம்பட்டி ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

    தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் சூழ்நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
    • வளசரவாக்கம் மற்றும் ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    சென்னை:

    சென்னை போரூர் சிக்னல் அருகே குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக சாலையில் ஓடியது. இந்த தண்ணீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

    இதனால் வளசரவாக்கம் மற்றும் ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.


    • மழை கைகொடுத்தால் மட்டுமே கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணமுடியும்.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

    வருசநாடு:

    வைகை அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை, வருசநாடு, அரசரடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை முற்றிலும் ஓய்ந்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக மூல வைகையாறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மூல வைகையாறு முற்றிலும் வறண்டு வருகிறது. குறைந்த அளவே தண்ணீர் வருவதால் பொதுமக்கள் மிகவும் கவலையடைந்து உள்ளனர். இதன் காரணமாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    மழை கைகொடுத்தால் மட்டுமே கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணமுடியும். மூல வைகையாற்றில் நீர்வரத்து இல்லாததால் வைகை அணைக்கு 5 கனஅடி நீர் மட்டுமே வருகிறது.

    அணையின் நீர்மட்டம் 64.52 அடியாக உள்ளது. பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4525 மி.கனஅடியாகும்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.20 அடியாக உள்ளது. 42 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 110.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    ×